சென்னை ரேஸ் கோர்ஸ் கிளப்புக்கு சீல்- வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி..!
வாடகை பாக்கி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப் மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று சீல் வைத்துள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கோர்ஸ் கிளப்புக்கு, கடந்த 1945 ஆம் ஆண்டு 99 ஆண்டுக்கு குத்தகையின் அடிப்படையில் நிலம் வழங்கப்பட்டது. இதற்காக ஆண்டுக்கு 614 ரூபாய் 13 காசு வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த வாடகை தொகையை உயர்த்துவது தொடர்பாக மெட்ராஸ் ரேஸ் கோர்ஸ்க்கு அப்பகுதி வட்டாட்சியர் நோட்டிஸ் அனுப்பி இருந்தார். இந்த நோட்டிஸ்க்கு பதில் அளித்த மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் இதற்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தந்தில் வாடகை தொகை உயர்ந்துவது தொடர்பாக எந்தப் பிரிவும் சேர்க்கப்படவில்லை என தெரிவித்தது
இதை ஏற்க மறுத்த தமிழ்நாடு அரசு 1970 ஆம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்துக்கு வாடகை பாக்கித் தொகையாக ரூ.730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாயை செலுத்தும்படி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரேஸ் கோர்ஸ்க்கான இடத்தை கையகப்படுத்தி அதனை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் செலுத்த தவறிய ரூ.730.86 கோடியை 1 மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அவ்வாறு செலுத்த தவறினால் ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் வசம் உள்ள 160 ஏக்கர் நிலத்தை மீட்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், வாடகை பாக்கி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப் மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று சீல் வைத்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் ரேஸ் கிளப்புக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது தமிழக அரசு. ரேஸ் கிளப்புக்கு சீல் வைத்து அதற்கான அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது.