கால்வாயில் கொட்டப்பட்ட இராசயன கழிவுகள்..! மர்ம நபர்களுக்கு போலீஸ்..?
வாணியம்பாடி அருகே நீர் வரத்து கால்வாயில் மர்ம நபர்கள் இராசயன கழிவுகள் கொட்டி சென்றதால் பரபரப்பு. பொதுமக்கள் அச்சம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நியூடவுன் பகுதியில் உள்ள பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள தேவாலயம் அருகில் கோவிந்தாபுரம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் நீர் வரத்து கால்வாய் உள்ளது.
இந்த கால்வாய் நாடார்காலணி, நியு டவுன் கேட், நூருல்லாபேட்டை, பேருந்து நிலையம், சி எல் சாலை, எம்.எல். ஏ அலுவலகம் வழியாக சென்று நேரடியாக பாலாற்றில் கலக்கிறது. இந்த கால்வாயில் மர்ம நபர்கள் யாரோ அமில தன்மை கலந்த இரசாயன கழிவுகளை லாரியில் கொண்டு வந்து ஊற்றி சென்றுள்ளனர்.
இந்த கால்வாயில் தண்ணீர் தரம் மாறி பயங்கர நெடியுடன் துர்நாற்றம் வீசியுள்ளது. அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் இதை உணர்ந்து அச்சமடைந்து உடனடியாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரசாயனம் கலந்த நீரை மாதிரி எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் தூர்நாற்றம் வீசாமல் இருக்க ரசாயன கலந்த நீரில் சுண்ணாம்பு பவுடரை கலந்து சென்றுள்ளனர்.
இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் இந்த இரசாயன கழிவுகள் கலந்த நீர் ஏரி மற்றும் பாலாற்றில் நேரடியாக கலந்து விட்டால் நீரின் தன்மை முற்றிலும் மாறிவிடும் சூழல் எழுந்துள்ளது இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் வெளி மாவட்டத்தில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வந்து இது போன்ற கழிவுகளை கொட்டிச்செல்பவர்களை கண்டறிந்து காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது., இந்த நீர் வரத்து கால்வாயில் கலக்கப்பட்ட ரசாயனம் அமிலத்தன்மை கொண்ட ரசாயன கழிவு இதை வெளி மாவட்டத்தில் இருந்து யாரோ லாரி மூலமாக கொண்டு வந்து கொட்டி சென்று இருக்கலாம். இந்த அமிலத்தன்மை கொண்ட ரசாயனம் நமது மாவட்டத்தில் கிடையாது, மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளோம் என்று கூறினார்.
– லோகேஸ்வரி.வெ