ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 15ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் இருக்கக்கூடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அன்றைய தினம் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், நெஞ்சு வலி காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இவருக்கு இதயவியல் நிபுணர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர் எனவும் தகவல் வெளியானது. இந்நிலையில் ஈவிகேஎஸ் உடல் நிலை சீராக உள்ளதாகவும், அவர் நலமுடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இருதய சிகிச்சை நிபுணர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், எக்கோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல்கள் வெளியாகின. இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு தொற்று உறுதியானது.
இதனையடுத்து கொரோனா சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்ட அவருக்கு கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மூச்சு திணறல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள்வெளியாகின. மேலும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதை அடுத்து, ஆக்ஸிஜன் கருவி பொருத்தப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவிட்டதாகவும், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் இதய பாதிப்பில் இருந்தும் குணமடைந்து வருவதாகவும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post