நாமக்கல் மாவட்டம் அரூர் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படாததால் கூட்டம் பாதியிலே நிறுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வளையபட்டி, அரூர், பரளி, என்.புதுப்பட்டி ஆகிய கிராம ஊராட்சி பகுதியில் சிப்காட் அமைக்க மாவட்ட நிர்வாகம் நிலங்களை அளவீடு செய்து வருகிறது.
சிப்காட் அமைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் என கூறி விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அரூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. செல்வமணி பெரியண்ணன் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது.
அப்போது அங்கு இருந்த சிலர் சிப்காட் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு சிப்காட் எதிர்ப்பாளர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து சிப்காட் அமைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என கூறியதால் கிராம சபை கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதனால் கிராம சபை கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
தீர்மானங்களை எழுதாமல் ஒரு சில பக்கங்களை காலியாக விட்டு விட்டு பொதுமக்களிடம் ஊராட்சி மன்ற செயளாலர் கருப்பண்ணன் கையெழுத்து பெற முயன்றதால் பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
பொது மக்களின் கோரிக்கையை தீர்மானமாக எழுத முடியாது எனக் கூறிய அரூர் ஊராட்சி செயலாளர் தீர்மான நோட்டையும் எடுத்துச் சென்றார். அப்போது அங்கிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் படம் பிடித்த போது அதனை பிடுங்க முயற்சித்து மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து அங்கு இருந்த சிப்காட் எதிர்ப்பாளர்கள் சிலர் ஊராட்சி செயலாளர் கருப்பண்ணனை சத்தம் போட்டதால் அலுவலகத்திற்கு உள்ளே சென்றுவிட்டார். அரூரில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சிப்காட்டிற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றபடாமல் கூட்டம் பாதியிலேயே முடிவடைந்தது.
Discussion about this post