திருப்பத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற அண்ணன் தம்பி இருவரும் பாலம் குழியில் விழுந்து பலி..!!
திருப்பத்தூர் அருகே அண்ணன் தம்பி இருவர் இருசக்கர வாகனத்தில் பாலம் கட்டுமான குழியில் விழுந்து உயிரிழப்பு
கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட மற்ற பள்ளி ஊராட்சி மேற்கத்தியனூர் பகுதியில் வசிப்பவர் ராஜா (55). இவருடைய மூத்த மகன் வினோத் (32) தனியார் நூல் தொழிற்சாலையிலும் இளைய மகன் விக்னேஷ் (30) தனியார் வங்கியிலும் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் திருப்பத்தூரில் இருந்து மேற்கத்தியனூர் பகுதியில் உள்ள தங்களுடைய வீட்டிற்கு இரவு சுமார் ஒரு மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது அப்பாவு வட்டம் பகுதியில் திருப்பத்தூர் உட்கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பாக சிறு பாலம் அமைக்கும் பணியின் காரணமாக சாலையின் நடுவே மலை போல் மண் குவித்து வைக்கப்பட்டுள்ளதை அறியாத சகோதரர்கள் இருவரும் மண் குவியலின் மீது மோதியதால் சிறு பாலம் குழியில் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பத்தூர் கிராமிய காவல்துறை சகோதரர்கள் இருவரின் சடலத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணன் தம்பி இருவரும் விபத்தில் சிக்கி ஒரே நேரத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.