கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில பாஜகவினர் மண்டியாவில் இன்று போராட்டம் நடத்தினர்..
தமிழ்நாட்டுக்கு திறந்துவிடவேண்டிய காவிரி நீரை முழுமையாக கர்நாடகா திறந்துவிடவில்லை. தமிழ்நாட்டுக்கு எஞ்சிய 37 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.இதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இதேபோல கர்நாடகா அரசும் இவ்வழக்கில் இணைந்தது. இந்த வழக்கை விசாரிக்க புதிய அமர்வை உச்சநீதிமன்றம் இன்று அமைத்துள்ளது.
இதனிடையே கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க கூடாது என்பதை வலியுறுத்தி மண்டியாவில் கர்நாடகா மாநில பாஜகவினர் உக்கிரப் போராட்டம் நடத்தினர். எம்.பி.யும், நடிகையுமான சுமலதா அம்பரீஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் திறந்துவிடுவதை உடனே நிறுத்த வலியுறுத்தி பாஜகவினர் முழக்கங்கள் எழுப்பினர். அத்துடன் சாலை மறியல் போராட்டத்தையும் நடத்தினர்.
தமிழ்நாடு- கர்நாடகா இடையேயான காவிரி நதிநீர் பிரச்சனையில் மண்டியா மாவட்டம்தான் எப்போதும் கொதிநிலையில் இருக்கும். இதற்கு காரணம் மண்டியா மாவட்டத்தில்தான் கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டு அமைந்துள்ளதும், அதிகப்படியான காவிரி நதிநீர் பாசன பகுதியாக கர்நாடகாவில் அந்த மாவட்டம் இருப்பதும்தான். தற்போது தமிழ்நாட்டுக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்தி இருப்பதால் மண்டியாவில் பெரும் பதற்றம் நிலவுகிறது.