தன் மீதும் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் மீதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 50 கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் எனக்கோரி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
திமுக அமைச்சர்கள் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் குடும்பத்தினர் செய்துள்ள ஊழல் பட்டியலை வெளியிடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த வாரம் அறிவித்திருந்தார். இதனையடுத்து கடந்த 14ம் தேதி சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மு.க.ஸ்டாலின், கனிமொழி, சபரீசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரது சொத்து பட்டியல் எனக்கூறப்படும் ஒன்றினை வெளியிட்டார்.
இந்நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்துபட்டியல் எவ்வித அடிப்படை ஆதாரங்கள் அற்றது என்றும், 15 நாட்களுக்குள் ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறினால் சட்ட நடவடிக்கை பாயும் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரித்திருந்தார்.
இதனிடையே அவதூறு குற்றச்சாட்டுக்களை வைத்ததற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து வீடியோவை நீக்க வேண்டும் என்றும், 500 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டும் கடந்த 17ம் தேதி திமுக சார்பில் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தற்போது உதயநிதி ஸ்டாலின் சார்பில் திமுக எம்.பி. வில்சன் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் செய்தியாளர்களிடம் DMK Files என்ற பெயரில் பேசிய அவதூறுகளுக்காக பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அதனை தேசிய அளவிலான ஆங்கில நாளிதழ்கள், தமிழ் நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
‘என் மண் என் மக்கள்’ சமூக வலைத்தளத்தில் உள்ள வீடியோவை நீக்க வேண்டும். மேலும் உதயநிதி பற்றி அவதூறான கருத்துக்களை பேசுவதை, பகிர்வதை, வீடியோ பதிவிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் உதயநிதி மற்றும் அவரது ரெட் ஜெயிண்ட் நிறுவனம் குறித்து அவதூறு பரப்பிதற்காக 50 கோடி ரூபாயை நஷ்டஈடாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.