மத்தியப்பிரதேச மாநிலத்தில் பிஞ்சு குழந்தையான சகோதரியை பொம்மை போல் வைத்து விளையாடிய சிறுமிகளால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டத்தில் 4 மற்றும் 6 வயதுடைய இரண்டு சகோதரிகள், தங்களது கடைசி சகோதரியான இரண்டு மாத குழந்தையை வாளியில் குளிப்பட்ட முயன்றுள்ளனர். அப்போது குழந்தை தவறி வாளிக்குள் விழுந்துள்ளது. பெற்றோரிடம் சொன்னால் எங்கே திட்டுவார்களோ என்பதால் இருவரும், வாளியை ஒரு மூடிபோட்டு மூடிவைத்துள்ளனர்.
மார்ச் 22ம் தேதி மூன்று பெண் குழந்தைகளின் தாய் தனது கடைசி குழந்தையை சோபாவில் உறங்க வைத்துவிட்டு, அதன் அருகில் மற்ற இரண்டு பெண் குழந்தைகளை விளையாட வைத்துவிட்டு சமைக்கச் சென்றுள்ளார். வழக்கமாக பெண் குழந்தைகள் விளையாடும் டெடி பொம்மையை அவளர்களுடைய தாய் தண்ணீரில் நனைத்து காயப்போடுவதை குழந்தைகள் பார்த்துள்ளனர்.
எனவே அதேபோல் தனது தங்கச்சி பாப்பாவையும் குளிப்பாட்ட நினைத்து, 2 மாத கைக்குழந்தையான அனார்ஜாவை குளியலறைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு குழந்தை தவறி வாளிக்குள் விழுந்து, மூச்சுதிணறி இறந்துள்ளது. முதலில் குழந்தை கடத்தப்பட்டதாக நினைத்த நிலையில், போலீசார் இரண்டு சகோதரிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது சிறுமிகள் இருவரும் நடந்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து, குழந்தையின் சடலம் மூன்று நாட்களுக்குப் பிறகு வாளியில் இருந்து மீட்கப்பட்டது. குழந்தை அனார்ஜாவின் மரணத்திற்கு சகோதரிகள் தற்செயலாக காரணம் என்று போலீசார் முடிவு செய்தனர், ஆனால் அவர்களின் இளம் வயது காரணமாக, அவர்களின் செயல்கள் குற்றமாக கருதப்படவில்லை. ஐபிசியின் 82வது பிரிவின்படி, 7 வயதுக்குட்பட்ட குழந்தை செய்த குற்றத்தை பதிவு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post