அத்திக்கடவு அவிநாசி திட்டம் துவக்கம்..!! அமைச்சர் முத்துசாமி கொடுத்த உறுதி..!!
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானிவாய்க்கால் முதல்போக நன்செய் பாசனத்துக்கு நேற்று (வியாழக்கிழமை) அமைச்சர்கள் சு.முத்துச்சாமி, மு.பெ.சாமிநாதன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா ஆகியோர் கால்வாய் மதகு பொத்தானை அழுத்தி தண்ணீர் திறந்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து, நாளை அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் காணொலி வாயிலாக துவக்கி வைக்கிறார்.
பவானிசாகர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஆகஸ்ட 15ம் தேதி கீழ்பவானி பிரதான கால்வாயில் முதல்போக நன்செய் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும். அந்த வகையில், பவானிசாகர் அணையில் போதுமான நீர் இருப்பு இருந்ததால் இந்த ஆண்டு வாய்க்கால் பாசனதிற்கு தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்று, அணையில் இருந்து நன்செய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது..
அந்த அறிக்கையின் படி அமைச்சர் சு.முத்துச்சாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா ஆகியோர் நீர் பாசனத்தை திறந்துவிட்டனர். அதன்பின் வாய்க்காலில் இருந்து நிலத்திற்கு வந்த தண்ணீரின் மீது அமைச்சர்கள், அதிகாரிகள், மற்றும் விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர்.
முதற்கட்டத்தில் 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. அதன் பின்னர் திறக்கப்படும் கன அடி நீரானது 1,000, 1,500, 2,300 கன அடி என உயரத்தப்படுவதாக விவசாயிகளுக்கு அதிகாரிகள் நம்பிக்கை கொடுத்துள்ளனர். மேலும், ஆகஸ்ட 15ம் தேதி முதல் டிசம்பர் 12ம் தேதி வரை ஈரோட்டிற்கு மொத்தம் 23 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஈரோடு, மாவட்டம் மட்டுமின்றி கரூர் மற்றம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1லட்சத்து 3,500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த நிலையில், அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீரை சிக்கமான பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா கேட்டுக்கொண்டார். நேற்றைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 96.37 அடியாகவும், நீர் இருப்பு 25.98 டிஎம்சியாகவும், நீர் வரத்து 876 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் வாய்க்காலில் 500 கனஅடி நீரும், பவானி ஆற்றில் 750 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சு.முத்துசாமி, “ஈரோடு மாவட்டம் பவானி நீரேற்று நிலையத்தில் ஆகஸ்ட் 17ஆம் தேதி அத்திக்கடவு – அவிநாசி திட்ட துவக்க விழா நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சர் இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார். இதில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் முதலமைச்சர் உத்தரவின் மூலம் 1,045 குளங்களுக்கும் தண்ணீர் கொடுப்பதை உறுதி செய்துள்ளோம். ஆங்காங்கே சிறுசிறு பிரச்சனைகள் உள்ளன. அவையெல்லாம் சரி செய்யப்பட்டு முழுமையாக அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்படும்.
விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நீதிமன்ற உத்தரவின் படி இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இந்த திட்டத்துக்கான பம்பிங் ஸ்டேஷன் ஒன்று முதல் மூன்று வரை கடந்த அதிமுக ஆட்சியில் நிலம் கையகப்படுத்தவில்லை. அதனால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. திமுக ஆட்சி வந்த பின்பு தான் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த பணி நிறைவேற்றப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.