டிரம்ப் மீதான கொலை முயற்சி..! ராகுல் காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே கண்டனம்..!
முன்னாள் அதிபர் மீதான தாக்குதல் சம்பவங்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சூழலில், பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்தில இருந்த நபர் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார்.
டொனால்டு டிரம்ப் மீதான தாக்குதலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி எம்.பி, இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீதான படுகொலை முயற்சியால் நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். இத்தகைய செயல்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். அவர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன்” என்று அதில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்க்கே தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
– லோகேஸ்வரி.வெ