ஆர்ம்ஸ்டராங்க் கொலை வழக்கு.. சம்போ செந்திலை பிடிக்க காவல்துறையினர் தீவிரம்..
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆர்ம்ஸ்டராங்க். இவர், கடந்த மாதம் ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் 15 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.. இந்த சம்பவம், இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக, இதுவரை ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பென்னை பாலு உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்போ செந்தில் என்பவரையும், காவல்துறையினர் திவீரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்போ செந்தில் குறித்து முக்கியமான தகவல் ஒன்று, காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
அதாவது, வி.பி.என். செயலி மூலமாக, தினமும், 5 பேரிடம், சம்போ செந்தில் பேசி வருகிறார் என்பதை, காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இதனை வைத்து பார்க்கும்போது, அந்த 5 பேரை கண்டறிந்து, அவர்கள் மூலமாக, சம்போ செந்திலை அவர்கள் பிடிப்பார்கள் என்று அறியப்படுகிறது.
-பவானி கார்த்திக்