வறுமையிலும் சாதித்த அரியலூர் மாணவன்..! கால்நடை இளநிலை மருத்துவ தரவரிசை பட்டியலில் முதலிடம்..!
அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் இவரது மனைவி தேவகி. முருகேசன் சைக்கிள் ரிப்பேர் கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒருமகள் மற்றும் ஒருமகன் உள்ளனர், வறுமை நிலையில் இருந்தாலும் தனது குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும். என்ற எண்ணத்தில் தனது வறுமையையும் பொறுட்படுத்தாத முருகேசனின் மகள் பிஎஸ்சி முடித்து விட்டு எம்எஸ்சி படிப்பதற்கு விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில் இளைய மகன் ராகுல்காந்த் கடந்த ஆண்டு கீழப்பழுவூரில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வு எழுதி 588 மதிப்பெண்கள் பெற்றார் கணிதம், இயற்பியல், வேதியல் ஆகிய மூன்று பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.
இதனையடுத்து பொறியியல் மற்றும் கால்நடை இளநிலை மருத்துவத்திற்கு விண்ணப்பித்திருந்தார் எனினும் கிராமத்தில் வளர்ந்த ராகுல் காந்த் பொறியியல் படிப்பதை விட கால்நடை மருத்துவம் படிக்க வேண்டும். என்ற தீராத ஆசையுடன் தரவரிசை பட்டியலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் இன்று கால்நடை இளநிலை மருத்துவத்திற்கான தரவரிசை பட்டியலை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டது. இதில் பொது பட்டியலில் ராகுல்காந்த் முதலிடம் பெற்று சாதித்துள்ளார். வறுமை சூழ்நிலையிலும் தமிழ்நாடு அளவில் கால்நடை இளநிலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற ராகுல் காந்த்க்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முதலிடம் பெற்ற மகிழ்ச்சியில் ராகுல் காந்த் பெற்றோர்கள் அவருக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தற்போது ராகுல் காந்த் பெற்றோர்கள் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். மழைக்காலங்களில் பல்வேறு இடங்களில் மழைநீர் ஒழுகுவதை பாத்திரத்தில் பிடிக்கும் அளவிற்கு வறுமை நிலையில் அவர்கள் வசித்து வரும் நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தனது இடத்தில் அரசின் நிதியுடன் வீடுகட்டும் பணியையும் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து ராகுல் காந்த் கூறும் போது தனது பெற்றோர்களின் வறுமை நிலையிலும் தன்னை படிக்கவைக்க வேண்டும். என்ற அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாடு அளவில் முதலிடம் கிடைக்கும். என எதிர்பார்த்து இருந்தாலும் சிறிய அளவில் எனக்கு சந்தேகமும் இருந்தது.
தமிழ்நாடு அளவில் தற்போது முதலிடம் பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எனது பள்ளி நிர்வாகம் ஆசிரியர்கள் பெரிதும் உறுதுணையாக இருந்தனர் மேலும் எனது பெற்றோர்கள் அவர்களின் வறுமை சூழ்நிலையிலும் என்னை படிக்கவைக்க வேண்டும் என்ற அவர்களின் எண்ணத்தை தற்போது நிறைவேற்றி உள்ளது. மகிழ்ச்சியை அளிக்கிறது எனகூறினார்
வறுமையிலும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் சாதித்த ராகுல் காந்த் பெருமைக்குரியவரே என்பதில் மாற்று கருத்து இல்லை, இவரின் இந்த சாதனைக்கும் மதிமுகம் சார்பாக வாழ்த்துக்கள் சொல்லலாமே.
Discussion about this post