கம்பத்தில் இருந்து இடம்பெயர்ந்த அரிசிக்கொம்பன் காட்டு யானை சுருளிப்பட்டியில் உள்ள மலையடிவார தோட்டத்திற்குள் முகாமிட்டுள்ளது. வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மேகமலை வனப்பகுதிக்குள் சுற்றி வந்த அரிக்கொம்பன் காட்டு யானை நேற்று தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதிக்குள் நுழைந்ததை அடுத்து அதை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். முதலில் கம்பம் நகர் பகுதியில் உலா வந்த யானை பின்னர் அங்குள்ள புளியந்தோப்பிலும், வாழைத் தோட்டத்திலும் நாள் முழுவதும் முகாமிட்டது. இதனால் யானையை வனத்திற்குள் விரட்டும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதனை அடுத்து தமிழக அரசின் சார்பில் கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இது தொடர்பாக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். மேலும் பொள்ளாச்சியில் இருந்து சுயம்பு என்ற ஒரு கும்கி யானை வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னொரு கும்கி யானை வந்தவுடன் அரிக்கொம்பன் காட்டு யானையை பிடிக்கும் பணிகள் துவங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை யானை கம்பம் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து சுருளிப்பட்டியில் உள்ள யானை கெஜம் என்ற பகுதியில் மலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. முன்னதாக கம்பத்தில் இருந்து இடம்பெயர்ந்த அரிசிக்கொம்பன் யானை, சுருளி அருவி சாலையில் உள்ள கருநாக்கமுத்தன்பட்டி பிரிவில் உள்ள தனியார் தோட்டத்தில் சிறிது நேரம் நின்றது. பின்னர் அங்கிருந்து பலா தோட்டத்தை விட்டு வெளியேறிய அரிசிக்கொம்பன், கோடி லிங்கேஸ்வரர் கோயில் அருகே சென்று பின், யானை கெஜம் பகுதியை சென்றடைந்துள்ளது. அரிசிக்கொம்பன் நடமாடிய வழித்தடத்தில் இருந்த பலா, திராட்சை தோட்டங்கள் சேதமடைந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனிடையே அரிசிக்கொம்பன் நடமாட்டத்தால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். யானை இருக்கும் இடத்தில் இருந்து சுற்று வட்டார பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் தூரம் பொதுமக்கள் செல்லாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு உள்ளனர்.
Discussion about this post