அண்ணாமலை பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து..! கண்டனமா..? கலக்கமா..?
கோவை : கோவையில் நேற்று செய்தியாளர் சந்திப்பு குறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியது சர்ச்சையான நிலையில், இன்று அவரது பத்திரிகையாளர் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது.
“தமிழகத்தில் பா.ஜக – அ.தி.மு.க கூட்டணி அமைத்திருந்தால் சாதகமான சூழல் அமைந்திருக்கும்” எனவும், பா.ஜ.க ஐ.டி-விங்கை எச்சரித்தும் தமிழிசை பேசியது விவாதப் பொருளானது.
தமிழக பா.ஜ.க தலைமை சரியில்லை எனவும் சமூகவலைதளங்களில் கண்டனக் குரல்கள் எழத் தொடங்கின. இந்நிலையில், நேற்று (ஜூன் 11) டில்லியில் இருந்து கோவை வந்த அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்காமல், காரில் ஏறியவர், “இனி பா.ஜ.க அலுவலகத்தில் மட்டும் தான் செய்தியாளர் சந்திப்பு. என் வாழ்வில் எப்போதும் கோவை விமான நிலையத்தில் பேட்டி இல்லை. கட்சியில் உள்ள அனைவரது செய்தியாளர் சந்திப்பும் அப்படித் தான் நடைபெறும். பாத்ரூம் போகும்போது… வரும் போதெல்லாம் இனி யாரும் பேசமாட்டார்கள்.
செய்தியாளர் சந்திப்பை முறைப்படுத்தவுள்ளோம். இது தொடர்பான அலுவலக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” எனக் கூறிச் சென்றார்.
செய்தியாளர் சந்திப்பு குறித்த அண்ணாமலையில் அரசியல் நாகரீகமற்ற இந்த கருத்து திரும்பப் பெற வேண்டும். தமிழிசையையும், தன்னை எதிர்த்து பேசும் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் ஓரங்கட்டவே செய்தியாளர் சந்திப்புக்கு முட்டுக்கட்டை போடுவதாக அரசியல் விமர்சகர்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
“நாளை (ஜூன் 12) கோவை மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும்ங்க அண்ணா, அது குறித்து விவரம் உங்களுக்குத் தரப்படும்” என்று செய்தியாளர்களிடம் கூறிவிட்டுச் சென்றார் அண்ணாமலை.
இந்த பேச்சுக்குப் பின் தொடர் கண்டனக்குரல்கள், கட்சிக்குள் சலசலப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில், அண்ணாமலையின் பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப் படுவதாக பா.ஜ.க அறிவித்துள்ளது.
இதுகுறித்து பா.ஜ.க மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் வெளியிட்ட குறிப்பில், “பத்திரிக்கை ஊடகநண்பர்களுக்கு காலை வணக்கம். இன்று காலை நடக்கவிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது மற்றொரு தேதியில் அறிவிப்பு வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ