தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை!!!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதேபோல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நாளை, நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஆங்காங்கே கனமழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, பாரிமுனை, ஆலந்தூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்த வரையில், அடுத்த 24 மணி நேரத்திற்க்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சில பகுதிகளில் சற்று பலத்த மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, கேரளாவில் நாளை, மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.