தீவிரவாதம் ஒழிக்கப்படும் அமித்ஷா உறுதி..!
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் ஒழிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 9ம் தேதி இரவு, ரெய்சி பகுதியில் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலினால் பேருந்து பள்ளத்தில் விழுந்து 9 பேர் பலியாகினர். மேலும் 41 பேர் காயமடைந்தனர்.
இதனையடுத்து, கடந்த 11ம் தேதி நள்ளிரவு கதுவா மாவட்டத்தில் குடியிருப்பின் மீதும், தோடா பகுதியில் பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடியை குறிவைத்தும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 6 வீரர்கள் காயமடைந்ததனர்.
இதனைத் தொடர்ந்து தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், தோடா மாவட்டம் காண்டோ பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
அந்த யூனியன் பிரதேசத்தின் பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் அமித் ஷா தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உயரதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பயங்கரவாதச் செயல்களுக்கு உடனடியாகப் பதிலடி தரும் வகையில் செயல்படுமாறு பாதுகாப்பு அமைப்புகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் பேசிய அமித் ஷா, பிரதமர் மோடி தலைமையிலான அரசு காஷ்மீரில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி உள்ளதாகவும் குறிப்பாக, காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு பகுதியில் தீவிரவாத தாக்குதல்கள் கணிசமாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் காஷ்மீரில் மக்களவை தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வாக்குப்பதிவு சதவீதமும் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர் தேர்தல் அமைதியாக நடைபெற நடவடிக்கை எடுத்த பாதுகாப்பு படையினரை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
– வெ.லோகேஸ்வரி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..