ADVERTISEMENT
16, 17 ஆகிய தேதிகளில் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!!
16, 17 ஆகிய தேதிகளில் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, சென்னையில் அடையாறு, கிண்டி, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்துள்ளது.
அதேபோல், நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த இரண்டு நாட்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
17 ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, நாகை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
15 மற்றும் 18 ஆகிய நாட்களில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.