சின்ன கவுண்டர், இந்தியன் உள்பட ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்த நடிகை சுகன்யா, சமீபத்திய பேட்டியில் மறுமணம் குறித்து பேசி இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் பல திறமைவாய்ந்த நடிகைகளை அறிமுகப்படுத்திய பாரதிராஜா, தன்னுடைய புது நெல்லு புது நாத்து படம் மூலம் கடந்த 1991-ம் ஆண்டு அறிமுகப்படுத்திய நடிகை தான் சுகன்யா. திறமையான நடிப்பால் கோலிவுட்டில் அசுர வளர்ச்சி கண்ட நடிகை சுகன்யா, குறுகிய காலத்திலேயே விஜயகாந்தின் சின்ன கவுண்டர், கமல்ஹாசனின் இந்தியன், சத்யராஜின் வால்டர் வெற்றிவேல் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.
நடிகை சுகன்யாவுக்கு கடந்த 2002-ம் ஆண்டு ஸ்ரீதரன் என்பவருடன் திருமணம் ஆனது. சுகன்யாவின் கணவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பதால் இவர்களது திருமணம் அமெரிக்காவில் தான் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் கணவருடன் அமெரிக்காவிலேயே செட்டில் ஆனார் சுகன்யா. இவர்களது திருமண வாழ்க்கை ஓராண்டு மட்டுமே நீடித்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார் சுகன்யா.
விவாகரத்துக்கு பின்னர் சினிமாவில் நடிப்பதையும் குறைத்துக் கொண்ட சுகன்யா, அவ்வப்போது மட்டும் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். தமிழில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் திருமணம். சேரன் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு இப்படம் திரைக்கு வந்தது. விவாகரத்துக்கு பின்னர் 20 ஆண்டுகளாக சிங்கிளாகவே வாழ்ந்து வரும் நடிகை சுகன்யாவுக்கு தற்போது 50 வயது ஆகிறது. இந்நிலையில், நடிகர் சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார் சுகன்யா.
அதில் மறுமணம் செய்துகொள்ளும் எண்ணம் இருக்கிறதா என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சுகன்யா, இதுவரை அப்படி ஒரு எண்ணம் எனக்கில்லை. எனக்கு இப்போ 50 வயசு ஆகுது. இனி கல்யாணம், குழந்தைனு வந்தா, அந்த குழந்தை என்னை அம்மானு கூப்பிடுமா இல்ல பாட்டினு கூப்பிடுமானு நானே யோசிப்பேன். நான் மறுமணம் வேண்டும்னு சொல்லல, வேண்டாம்னும் சொல்லல மழுப்பலான பதில் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி முதல் கணவருடன் நீதிமன்றத்தில் விவாகரத்து கிடைக்க ரொம்ப வருடங்கள் ஆனதாகவும் அந்த பேட்டியில் கூறி உள்ளார் சுகன்யா.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.