நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.
‘ஜெயிலர்’ படத்தின் மாஸ் ஹிட்டை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்த படத்தின் பணிகள் தொடங்கியுள்ளது. ரஜினியின் 170வது படமாக உருவாகும் அந்த படத்தை ‘ஜெய் பீம்’ இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்குகிறார். அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள அந்த படத்தை லைக்கா நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.
அந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகர்கள் நானி, பகத் பாசில், சர்வானந்த், நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். ‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கு அனிரூத் தான் இசையமைக்கவுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முஸ்லீம் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்திற்காக சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோ ஒன்றில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், லைக்கா நிறுவனர் சுபாஷ் கரண், இயக்குனர் டிஜே ஞானவேல் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.