சீரியலில் இருந்து சினிமா.. கவினின் நீண்ட பயணம்…!
தமிழ் சினிமாவின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு நடிகர்கள் முக்கிய இடத்தை பிடிப்பார்கள். எடுத்துக்காட்டுக்கு, எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய், தனுஷ்-சிம்பு, சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு துருவங்கள் சினிமாவில் உருவாகும்.
அப்படி, அடுத்த தலைமுறை நடிகராக வளர்ந்து வருபவர் தான் கவின். சீரியலில் நடித்துவிட்டு சினிமாவில் சாதித்த சொற்ப நடிகர்களில் ஒருவரான இவர், கடந்து வந்த வாழ்க்கை குறித்து தற்போது பார்க்கலாம்…
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஔிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் அறிமுகமானவர் கவின். இந்த சீரியலில் கல்லூரி மாணவராக நடித்து ரசிகர்களின் இதயங்களை வென்றிருந்தார்.
அதன் பிறகு, சில வருடங்களுக்கு எந்தவொரு வாய்ப்பையும் பெறாத இவருக்கு, மிகப்பெரிய வாய்ப்பு தேடி வந்தது. அதாவது, சரவணன் மீனாட்சி என்ற மிகப்பெரிய வெற்றி பெற்ற தொடரின் 2 வது பாகத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
முதலில் வில்லனாகவே சீரியலில் அறிமுகமான கவின், ரசிகர்களின் வரவேற்பு அதிகமாக கிடைத்ததால் ஹீரோவாக மாறினார். இப்படியே தொடர்ச்சியாக நடித்த நிலையில், அவர் கொஞ்சம் பிரபலம் ஆகி வந்தார்.
திடீரென, வெந்தும் வேகாததை போல, அந்த சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. சீரியல் நிறுத்தப்பட்ட சில வாரங்களிலேயே, கவின் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது.
அதன்பிறகு தான் தெரிந்தது, கவினின் தலையீடால் தான் அந்த தொடர் திடீரென நிறுத்தப்பட்டது என்று.., பின்னர், நட்புனா என்னனு தெரியுமா? படத்தில் நடித்தார். ஆனால், கவின் நினைத்தது போல அப்படம் பெரிய வெற்றியை தரவில்லை.
இதனால், வாய்ப்புகள் கிடைக்கால் இயக்குநர் நெல்சனுடன் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். இவ்வாறு நாட்கள் மிகவும் கடினமாக சென்றுக் கொண்டிருந்த வேளையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த நிகழ்ச்சியில், காதல், காமெடி, செண்டிமென்ட், கோபம் என்று அனைத்து ரசங்களையும் கொட்டி, ஆடியன்ஸை கவர்ந்த இவர், டைட்டில் ஆவார் என்று கருதப்பட்டது.
ஆனால் பரிசுப் பெட்டியை எடுத்து சென்று அங்கும் ஒரு பெரிய ட்விஸ்ட் கொடுத்தார். பின்பு, அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு, லிஃப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.
ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவான இப்படம், ஓடிடி தளத்தில் ரிலீசானது. பெரும்பாலும் நல்ல விமர்சனங்களையே இந்த திரைப்படம் பெற்றது. இதனால் கவினின் மார்கெட் லேசாக உருவானது. பின்னர், டாடா என்ற படத்தில் நடித்தார்.
வித்தியாசமான காதல் கூறியிருந்த இப்படம், ரசிகர்களை கவர்ந்தது. கவினின் வாழ்க்கையில் முதன்முறையாக, திரையரங்க வெற்றியை ருசித்தார்.
அதனால், அவரது மார்கெட் இன்னும் அதிகரித்தது. இதையடுத்து, ஸ்டார் படத்தில் நடித்தார். நடிகராக ஆசைப்படும் இளைஞர் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம், சுமாரான வெற்றியை பெற்றது.
இப்படி தன் வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த கவின், தற்போது கிஸ், மாஸ்க், ப்ளெடி பக்கர் என்று பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
மதிமுகம் தொலைக்காட்சி சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-பவானி கார்த்திக்