தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது..! சிபிசிஐடி அதிரடி..!
கடந்த 35 நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரவின் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீசார் கேரளாவில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் கரூர் நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வருவதாக கூறப்படுகிறது.
கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அவரது ஆதரவாளர்கள் 4 பேர்கள் மீது பத்திரப்பதிவு செய்து கொண்டார். கரூர் நகர காவல் நிலையத்தில் மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் அளித்த புகாரில் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 9ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என்பதால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் 12ம் தேதி மனு தாக்கல் செய்தார். 3 முறை விசாரணை ஒத்திவைக்கப்பட்டு விசாரணைக்கு பின் கடந்த 25ம் தேதி முன் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 35 நாட்களுக்கு மேலாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வருகிறார். இதற்கிடையில் கடந்த மாதம் 14ம் தேதி இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதே நாளில் வாங்கலை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவர் சகோதரர் சேகர், மற்றும் பிரவீண் உள்ளிட்ட 13 பேர் தன்னை மிரட்டி ரூ.100 கோடி மதிப்புள்ள ரூ.22 கோடி மதிப்புள்ள சொத்து அபகரித்து விட்டதாக புகார் தெரிவித்திருந்தார்.
இப்புகார் வாங்கல் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு கடந்த மாதம் 22ம் தேதி மேற்கண்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் சிகிச்சையின் போது உடனிருக்க வேண்டும் எனக்கூறி கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் முன் ஜாமீன் மற்றும் இடைக்கால முன் ஜாமீன் கேட்டு ஜூலை 1 மனு தாக்கல் செய்தார்.
கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு கடந்த ஜூலை 2ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் ஜூலை 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இரு தரப்பு வாதங்கள் நடைபெற்ற நிலையில் இதுதொடர்பான உத்தரவு ஜூலை 4ம் தேதி பிறப்பிக்கப்படும் என தெரிவித்த நிலையில் ஜூலை 4ம் தேதி இடைக்கால முன் ஜாமீன் தேவையில்லை. முன் ஜாமீன் மனு மீது ஜூலை 5ம் தேதி வாதம் நடைபெறும் என உத்தரவிட்டிருந்தார்.
ஜூலை 5ம் தேதி அரசு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஷோபனா தரப்பு என 3 தரப்பு வாதங்கள் நடைபெற்ற நிலையில் முன் ஜாமீன் மனு மீதான உத்தரவு இன்று பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் சிபிசிஐடி வழக்கு மற்றும் வாங்கல் வழக்கு என தலா இரு முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நீதிபதி சண்முக சுந்தரம் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று மதுரை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு எம் ஆர் விஜய பாஸ்கர் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று கேரளாவில் பதுங்கி இருந்த முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் அழைத்து வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..