ஆடி அமாவாசை.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள்..!
மாதந்தோறும் வரும் அமாவாசை காலங்களில் முன்னோர்களை நினைத்து பொதுமக்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்துவது வழக்கம். அதிலும் ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் செய்வர். இதுபோன்ற காலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும் என்பது மக்களின் காலக்கால நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் ஏராளமானோர் திரண்டு, முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் அதிகாலை முதலே ஏராளமானோர் திரண்டு கடலில் நீராடிவிட்டு, முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, வழிபட்டனர்.
இதனைதொடர்ந்து, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், சைதாப்பேட்டை காரணீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் உள்ள தெப்பக்குள கரைகளிலும் காலை முதலே ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதற்கான சடங்குகளை புரோகிதர்கள் செய்து வைத்தனர்.
செங்குன்றம் புழல் ஏரிக்கரை பகுதியிலும் ஏராளமானோர் தர்ப்பண சடங்குகளை நிறைவேற்றி, முன்னோரை வணங்கினர். பலரும் குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தனர்.
மேலும், வீடுகளில் முன்னோர்களின் படங்களுக்கு முன்பு படையலிட்டு வழிபாடு செய்தனர். பலரும் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம், ஆடைதானம் வழங்கினர்.
தமிழ் நாட்டில் வாழும் கேரள மக்கள் சிலர் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவர்களது ஆத்மா சாந்தியடைய சென்னை மெரினா கடற்கரையில் பிரத்தனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்