ஆம்பூரில் மதுபோதையில் கோயிலுக்குள் நுழைந்து கல்லால் உண்டியலை உடைக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் ஶ்ரீ நாகலம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகில் நேற்று நள்ளிரவில் திடீரென சத்தம் கேட்பதை அறிந்த அப்பகுதி மக்கள் சிலர் கோயில் அருகில் சென்று பார்த்த போது மது போதையில் கோயிலுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் கோயில் உண்டியலை கல்லால் உடைத்து கொண்டிருப்பதை கண்டு காவல்துறையினருக்கு 100 மூலம் தகவல் அளித்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான போலீசார் கோயிலுக்குள் இருந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் சந்தோஷ் என்பதும் ,இவர் சிலருடன் சேர்ந்து இது போன்ற திருட்டு செயலில் ஈடுபட்டு வருவதால் பெற்றோர் அவரை வீட்டை விட்டு அனுப்பியதாக கூறப்படுகிறது .இதனால் கடந்த சில தினங்களாக சிலருடன் சேர்ந்து சந்தோஷ் மதுபோதையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது.
மேலும் சந்தோஷை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவருடன் சென்று போலீசார் வருவது அறிந்து தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.