ஓசூரில் பட்டப் பகலில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சொப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் திலக் (24) இவர் ஓசூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர் இன்று தனது இருசக்கர வாகனத்தில் ஓசூர் ரயில்வே நிலையம் அருகே ரிங் ரோடு பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் நண்பர்களுடன் டீ குடிக்க சென்றுள்ளார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு நபர்கள் அதே டீக்கடையில் டீ குடித்துள்ளனர். அப்போது திடீரென நான்கு பேரும் தாங்கள் கொண்டு வந்த கத்தியை எடுத்து வாலிபர் திலக்கை சரமாரியாக தாக்கி வெட்டி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. கொலையாளிகள் நான்கு பேரும் இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து உடனடியாக தப்பி சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஓசூர் நகர காவல் துறையினர் மற்றும் ஓசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொலையான திலக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மத்திகிரி பகுதியில் நடந்த ஒரு கொலை சம்பவத்திற்கு பழி தீர்க்கும் வகையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த கொலை சம்பவம் குறித்து ஓசூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Discussion about this post