செல்பி மோகத்தில் வாலிபர்.. மின்சாரம் தாக்கி உடல் கருகி பலி…!
சென்னை திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் தெரு விவேகானந்தா அவென்யூவை சேர்ந்தவர் கவின் சித்தார்த் (19). இவர் தனியார் கல்லூரியில் பிபிஏ 3ம் ஆண்டு படித்து வந்தார.
இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் தண்டையார்பேட்டை இளையமுதலி தெருவில் உள்ள நீச்சல் குளத்துக்கு குளிக்க சென்றுள்ளார். பின்னர் அங்கு அனைவரும் குளித்துவிட்டு வீடு திரும்பும் போது கொருக்குப்பேட்டை ரயில்வே பகுதியில் அவர்கள் குரூப் போட்டோ எடுக்கலாம் என்று திட்டமிட்டனர்.
அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது கவின் சித்தார்த் ஏறி போட்டோ எடுத்து கொண்டிருந்தார். அப்போது அவரது கை அங்குள்ள மின்சார கம்பி மீது பட்டதால் ஷாக் அடித்து உடல் கருகிய நிலையில் தூக்கி வீசப்பட்டார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் அங்கிருந்த ரயில்வே உழியர்களை அழைத்து வந்தனர்.
உழியர்கள் கவின் சித்தார்த்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.
ஆனால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து சோதனை செய்து பார்த்தபோது மாணவர் கவின் சித்தார்த் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தண்டையார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் கொடுத்த தகவலின்படி, ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆபத்தை உணராமல் சரக்கு ரயில் மீது ஏறிய இளைஞர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்