முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்..! குழுதலைவர் யார்..?
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர், துணை தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. இதில் தி.மு.க. சார்பில் களம் இறங்கிய டி.ஆர்.பாலு, எஸ்.ஜெகத்ரட்சகன், கனிமொழி, ஆ.ராசா, தயாநிதிமாறன், தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கலாநிதி வீராசாமி, செல்வம், கதிர் ஆனந்த், சி.என்.அண்ணாதுரை, டி.எம்.செல்வகணபதி, ஆ.மணி, தரணிவேந்தன், மலையரசன், பிரகாஷ், கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி, அருண் நேரு, முரசொலி, தங்க தமிழ்ச்செல்வன், டாக்டர் ராணி ஸ்ரீகுமார் ஆகிய 21 வேட்பாளர்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றார்கள்.
இதில் கடைசி 10 பேர் நாடாளுமன்றத்துக்கு முதல்முறை எம்.பி.யாக செல்ல உள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்கள் 21 பேரும் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன்தினம் சந்தித்து, வெற்றி சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
இதற்கிடையே திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர், துணை தலைவர், பொருளாளர், கொறடா ஆகிய பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. திமுக நாடாளுமன்ற குழு தலைவராக டி.ஆர்.பாலு, துணைத் தலைவராக கனிமொழி, கொறடாவாக ஆ.ராசா ஆகியோர் ஏற்கனவே இருந்துள்ளனர்.
எனவே மீண்டும் அவர்களே இந்த பதவிகளுக்கு நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாளர் பதவியில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் இருந்து வந்தார். இந்த தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
எனவே பொருளாளர் பதவிக்கான பரிசீலனையில் ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன் ஆகியோரது பெயர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தி.மு.க.வின் “உதய சூரியன்” சின்னத்தில் போட்டியிட்டு நாமக்கல் தொகுதியில் வெற்றி பெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரனும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
– லோகேஸ்வரி.வெ
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..