திருப்பத்தூர் பற்றி ஓர் அறியப்பட்ட ரகசியம்..!! ஊரும் உறவும்-32
தமிழ்நாட்டில் இரண்டு திருப்பத்தூர் உள்ளன. வடக்கே வேலூர் மாவட்டத்தில் ஒன்று, தெற்கே சிவகங்கை மாவட்டத்தில் ஒன்று.
இதனால் பெயர்க்குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகின்றது. ஒருமுறை அஞ்சல் எண் புத்தகத்தைப் பார்த்தேன். தமிழ்நாட்டில், வல்லம் என்ற பெயரில் மட்டும் 12 அஞ்சல் எண்கள் உள்ளன.
நான் இரண்டு திருப்பத்தூர் வழியாகவும் எண்ணற்ற முறை பயணித்து இருக்கின்றேன்.
என் தாய்மாமா பேரன் திருமணத்தை ஒட்டி, கடந்த வாரம் வடக்கே உள்ள திருப்பத்தூருக்குச் சென்றேன். முன்பு அது வட ஆற்காடு மாவட்டம், அடுத்து வேலூர் மாவட்டத்தில் இருந்தது. இப்போது தனி மாவட்டம் ஆகி விட்டது.
என் முகநூல் பதிவுகளைப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பார்த்து வருகின்ற தம்பி சதீஷ், முதன் முறையாக மூன்று மாதங்களுக்கு முன்பு பேசினார். அவருடன் நிகழ்த்திய உரையாடலை முகநூலில் பதிவு செய்து இருந்தேன்.
திருப்பூரில் ஜெய் யார்ன்ஸ் என்ற பெயரில் இவரும், இவரது அண்ணனும் சேர்ந்து நூல் கடை வைத்து இருக்கின்றனர். அங்கிருந்து ஆயத்த ஆடைகளை வாங்கி திருப்பத்தூர் பகுதிகளில் விற்கின்றார். திருப்பூரில் பாதி, திருப்பத்தூரில் பாதி என வாழ்க்கை ஓடுகின்றது.
திருப்பத்தூர் பக்கம் வருவதாக இருந்தால் சொல்லுங்கள் என்றார். அதனால் அவரைத் தொடர்பு கொண்டு பேசினேன். பேருந்து நிலையத்திற்குத் தம் காரில் வந்து வரவேற்று அழைத்துச் சென்றார்.
திருப்பத்தூர் பேருந்து நிலையம் எதிரே ஒரு சிறிய திடலில் லண்டன் பாலம் போன்ற ஒரு அரங்கு அமைத்து இருக்கின்றார்கள். அதற்கு லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி என விளம்பரம் செய்து இருக்கின்றார்கள்.
சென்னை தீவுத்திடலில் பல நாடுகளின் சிறப்புக் கட்டுமானங்கள், உலக அதிசயங்களை இப்படி காட்சிப்படுத்துவது வழக்கம். பார்த்து இருக்கின்றேன். புதுமையை மக்கள் வரவேற்கின்றார்கள்.
திருப்பத்தூரில் புதிதாக சில உயர்தர தங்கும் விடுதிகளைக் கட்டி இருக்கின்றார்கள். அங்கெல்லாம் சுற்றினோம். ஆனால் அது திருமண நாள் என்பதால் அறை கிடைக்கவில்லை.
நான்காவதாக ஒரு விடுதியில் கிடைத்தது. காலைச் செய்தி தாள்களை வாசித்துவிட்டு,
10 மணி அளவில், ஏலகிரி மலைக்குப் புறப்பட்டோம். திருப்பத்தூரில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அந்த மலைக்கு இன்று போவது ஐந்தாவது முறை.
வழிநெடுகிலும் சதீசுடன் உரையாடி கொண்டே சென்றேன். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவல் அகம், தூய நெஞ்சக் கல்லூரி Sacred Heart College கண்ணில்பட்டது.
அருணகிரி :
தம்பி, திருப்பத்தூர் மாவட்டத்தின் பொருள் ஆக்கம் என்ன?
சதீஷ்
அண்ணா, பெருந்தொழில்கள் எதுவும் இல்லை. வேளாண்மைதான் முதன்மைத் தொழில்.
திருப்பத்தூர் சுற்றுவட்டாரத்தில் ஊதுபத்திகள் செய்கின்றார்கள்.
குடிசைத் தொழில் கூடங்கள் உள்ளன.
மாம்பழக் கூழ் ஆக்கும் தொழிற்கூடங்கள் உள்ளன. ஏற்றுமதி செய்கின்றார்கள்.
பீடி சுற்றுகின்றார்கள். கணேஷ் பீடி, தாஜ்மகால், சிவாஜி பீடி நிறுவனங்கள் உள்ளன.
அருணகிரி
ஆடுகள் நிறையத் தென்படுகின்றதே?
சதீஷ்
ஆம் அண்ணா. ஆடு, மாடு, கோழி நிறைய வளர்க்கின்றார்கள். இப்பொழுது தமிழ்நாடு அரசு ஆடு மாடுகளுக்குக் கொட்டகை அமைத்துத் தருகின்றார்கள். ஆம்பூர், வாணியம்பாடி நகரங்கள் பிரியாணிக்குப் புகழ் பெற்றவை. இன்று நாம் வாணியம்பாடி பிரியாணி சாப்பிடுவோம்.
தமிழ்நாட்டின் வடக்கு எல்லையில் இருப்பதால், இந்த மாவட்டத்தில் தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளைப் பேசுகின்ற மக்கள் கலந்து வாழ்கின்றார்கள். யாருக்கும் எந்தப் பிரச்சினையும் கிடையாது. எல்லோரும் இணக்கமாக நல்ல உறவுடன் வாழ்கின்றார்கள்.
இந்தப் பகுதியில் இருந்து நிறைய பேர் பெங்களூருக்கு சென்று குடியேறி இருக்கின்றார்கள். அவர்களும் கன்னடம் பேசுகின்றார்கள்.
அருணகிரி
இந்த மாவட்டத்தில் எத்தனை சட்டமன்றத் தொகுதிகள்?
சதீஷ்
அண்ணா திமுக ஆட்சியில் திருப்பத்தூர் மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பிரம்மாண்டமாகக் கட்டி விட்டார்கள். திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் என நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இந்த கதையை முழுவதுமாக தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post