அடையாறு அருகே மாநகர பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்து..! ஓட்டம் பிடித்த பயணிகள்..! விபத்தின் பின்னணி காரணம்..?
சிறுசேரிக்கு 102 என்ற வழிட எண் கொண்ட மாநகர பேருந்துகள் செயல்பட்டு வருகின்றன. பிராட்வேயில் இருந்து மெரினா கடற்கரை, காமராஜர் சாலை வழியாக அடையாறு, திருவான்மியூர், பெருங்குடி, சிறுசேரி வழியாக இந்த பேருந்து கேளம்பாக்கம் வரை செல்லும்.
இந்த பேருந்தில் எப்போதும் கூட்ட நெரிசல் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் இன்று வழக்கம் இந்த வழித்தடத்தில் இயங்கி வந்த சென்னை மாநகர பேருந்து ஒன்று அடையாறு எல்.பி சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரெனெ தீ பிடித்துள்ளது.
அடையாறு டெப்போ அருகே வந்த போது கியர் பாக்ஸில் தீப்பொறி கசிந்ததை கண்ட பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் உடனடியாக பேருந்தை ஓரம்கட்டி பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக கிழே இறக்கிவிட்டனர்.
பயணிகள் இறங்கிய சற்று நேரத்தில் பேருந்து தீ பிடித்து எரிந்தது. பேருந்து மளமளவென பற்றி எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீ அணைப்பு துறையினர் அரை மணி நேர போரட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஒரு கி.மீ தூரம் வரை இருக்கும் கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றை மூடும்படி தீயணைப்பு துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
அதிர்ஷ்டவசமாக பயணிகள் உரிய நேரத்தில் இறக்கி விடப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ பிடித்த பேருந்து சி.என்.ஜி. கேஸ் மூலமாக இயக்கப்படும் பேருந்து என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சிஎன்ஜி கேஸ் நிரப்பப்பட்ட இந்த பேருந்து கடந்த இரண்டு மாதங்களாக இந்த வழியில் சென்று வருவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
-பவானி கார்த்திக்