வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை 5.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது..
அந்தமானின் போர்ட் பிளேயருக்கு தென்மேற்கே சுமார் 510 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக் கொண்டுள்ளது காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு நோக்கி நகர்ந்து பின்னர் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவடைந்து இன்று மாலை அதே பகுதியில் புயலாக மாற வாய்ப்புள்ளது.. இதனையடுத்து
வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, அது படிப்படியாக மேலும் தீவிரமடைந்து நாளை காலை தீவிர புயலாகவும், நாளை மறுநாள் காலை தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடலில் அதிதீவிர புயலாகவும் மாறும் என கணிக்கப்பட்டுள்ளது..
அதன்பிறகு, அது படிப்படியாக மீண்டு, வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மே 13-ல் இருந்து சற்று வலுவிழந்து, மே 14-ம் தேதிக்கு முற்பகல் வேளையில் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரைகளைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
இதையொட்டி தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.