கர்நாடாகாவில் தும்கூர் மாவட்டம் பாவகடா அருகே தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 4 மாணவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் பாவகடா – ஒய் ஒசக்கோட்டை இடையே தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. காலை நேரங்களில் இந்த பஸ் மட்டுமே இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உட்பட 80 பயணிகளுடன் பஸ் சென்று உள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பஸ்சின் மேல் அமர்ந்திருந்து பயணித்ததாக கூறப்படுகிறது.
இந்த தனியார் பஸ் பாவகடா தாலுகா, பளவள்ளி டவுன் அருகே உள்ள ஏரி மீது சென்று கொண்டிந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப்படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் 4 மாணவர்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.அதில், படுகாயமடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனை தொடர்ந்து, இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தும்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.