Vice Chancellor appointment case to Supreme Court
தமிழ் நாட்டு பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரத்தை தமிழ் நாடு அரசுக்கு வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற கோரும் மனு மீதான விசாரணை இந்த மாதம் மே 26-ல் நடைபெற உள்ளது.
மாநில அரசின் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்க வகை செய்யும் மசோதா உள்ளிட்டவைகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் வழங்கவில்லை. அதன் காரணமாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றமானது தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை கடுமையாக விமர்சித்ததுடன், அவர் நிறுத்தி வைத்திருந்த 10 மசோதாக்களுக்கும் தமது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. அதன் காரணமாக தமிழக பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்க வகை செய்யும் சட்டம் நடைமுறைக்கு வந்தது. Vice Chancellor appointment case to Supreme Court
இந்த சட்டத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பாஜகவைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு மனுத் தாக்கல் செய்திருந்தது.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை பெஞ்ச் நீதிபதிகளான ஜி.ஆர் சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர், உச்சநீதிமன்றத்தில் தமிநாடு அரசு மனுத் தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்த போதும், தமிழக அரசின் சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இது மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இவ்வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரும் தமிழ்நாடு அரசின் மனு மீதான விசாரணை வரும் மே 26-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.