வாழ்க்கையில் துன்பமும் துயரத்தை மட்டுமே பார்த்தவர் மாலா பாபால்கர். பார்வையற்றவர். மகராஸ்டிர மாநிலம் ஜல்கான் ரயில் நிலையத்தில் குப்பைதொட்டி அருகே படுத்து கிடந்த இவரை, அமராவதியை சேர்ந்த சங்கர்பாபா பாபால்கர் நடத்தும் மறுவாழ்வு மையத்தை சேர்ந்தவர்கள் மீட்டனர். சங்கர்பாபா பாபால்கர்தான், இவருக்கு மாலா பாபால்கர் என்கிற பெயரையும் சூட்டினார். பின்னர், அவரின் ஆதரவுடன் படிக்க தொடங்கினார் மாலா.
அர்ப்பணிப்புணர்வுடன் படித்த மாலா 2018ம் ஆண்டு அமரவாதி பல்கலையில் இளங்கலை பட்டம் வென்றார். பின்னர், Vidarbha Institute of Science and Humanities நிறுவனத்தில் முதுகலை பட்டம் பெற்றார். பல்வேறு சவால்களுக்கிடையே மகராஸ்டிர மாநில பப்ளிக் சர்வீஸ் தேர்வை எழுதி அதில் வெற்றி பெற்று விட்டார். இதையடுத்து, அவருக்கு நாக்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கிளார்க் பணியும் கிடைத்துள்ளது.
இது குறித்து மாலா கூறுகையில், இப்போது ஆசிரமத்தை விட்டு வெளியே செல்வதுதான் எனக்கு கடினமான காரியமாக உள்ளது. இங்கேவுள்ள அனைவரையும் நான் மிஸ் செய்வேன். குறிப்பாக , பாபாவை என்னால் மறக்க முடியாது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து செல்வேன் என்கிறார்.
மாலாவின் அடுத்த இலக்கு யு.பி.எஸ்.சி தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ் ஆவதுதான். இதற்காக, தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார். தற்போது, அவருக்கு 26 வயதாகிறது.