உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருக்கட்டளை மேட்டுப்பட்டி திருவரங்குளம் புதிய பேருந்து நிலையம் மற்றும் ஆலங்குடி ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. மேலும் கனமழையுடன் பனிப்பொழிவும் அதிகமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், பழவேற்காடு தினம் கொண்டாடப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஜகதாம்பாள் சுப்பிரமணியம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் மூன்று இடங்களையும், கட்டுமரப்போட்டியில் மீராசா வெற்றி பெற்றனர். அவர்களுக்கு பழவேற்காடு மீன்வளத்துறை ஆய்வாளர் பாரதிராஜா பரிசுகளை வழங்கினார்.
கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் பிரகாஷ் உடல் நலக் குறைவால் காலமானார். உயிரிழந்த பிரகாஷின் மனைவி மற்றும் குழந்தைகளின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் காவலர்கள் 5 ஆயிரத்து 668 பேர் ஒன்றிணைந்து மகன் மற்றும் மகள் பெயரில் தலா 10 லட்சம் ரூபாய் 10 ஆண்டிற்கு நிரந்தர வைப்பு திட்டத்தின் மூலம் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்துள்ளனர். அதற்கான ஆவணங்கள் மற்றும் 28 லட்சத்து 34 ஆயிரம் ரூபாயை சக காவலர்கள் பிரகாஷின் குடும்பத்திற்கு வழங்கினர்.
திருப்பூர் காங்கேயம் சாலையைச் சேர்ந்தவர் அக்பர் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். இஸ்லாமியர்களின் புனித நூலான திருமறைக்குரானை எழுத வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட இவர் 13 வரிகளையும் 484 பக்கமும் கொண்ட திருக்குர்ஆனை மூன்று வருடமாக எழுதியுள்ளார். இந்த நிலையில் திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா தலைமையில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களைக் கொண்டு சரிபார்க்கும் பணியில் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குனராக பதவி வகித்து வந்த ராகேஷ் அகர்வால் வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்றுள்ளார். தற்போது புதிய இயக்குனராக டாக்டர் வீர்சிங் நெகியை ஒன்றிய அரசு நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இவரின் பதவியேற்பு விழா இன்று ஜிப்மர் நிர்வாக வளாகத்தில் உள்ள இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
விருதுநகர் அருப்புக் கோட்டை செந்திக்குமார நாடார் தனியார் கல்லூரியில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி மாணவ மாணவியர் வரை மொத்தம் 349 மாணவ, மனைவிகள் கலந்து கொண்டனர். அதில் 6 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது. மேலும் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் கல்லூரி நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டது.
















