பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சென்னையில் இருந்து 10,749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கு ஏற்றவாறு அரசு தயார்படுத்தி வருகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமாக இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,932 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்தான அறிவிப்பில், பொங்கல் பண்டிகை காரணமாக பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர் செல்ல ஜனவரி 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சென்னையில் இருந்து 10,749 சிறப்பு பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து இந்த 3 நாட்களுக்கு 6183 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த தினங்களில் சுமார் 5.37 லட்சம் மக்கள் பயணிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.