30 மணி நேர தொடர் விசாரணை… அதிர்ச்சியில் உறைந்த பெண்.. திடுக்கிடும் தகவல்கள்..!
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தாலன்வாலா பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். அந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் அவரிடம் நீங்கள் தாய்லாந்துக்கு அனுப்பிய கொரியர் பார்சலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்ததாகவும் மும்பை குற்றப்பிரிவில் இருந்து உங்களை தொடர்பு கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன பெண்ணிற்கு சிறிது நேரம் கழித்து ஸ்கைப் வீடியோ கால் மூலமாக காவல் உடையில் சிலர் தொடர்புகொண்டுள்ளனர். அப்போது அந்த பெண்ணிடம் பார்சல் தொடர்பாக விவரங்களை கேட்பதுபோல சுமார் 30 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த பெண்ணும் அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். அதன் பிறகு, சில ஆவணங்களை மும்பை குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்போவதாக கூறிய அவர்கள் அந்த பெண் மீது வழக்கு தொடராமல் இருக்க 10.50 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதனை கேட்டு பயத்தில் அந்த பெண் பணத்தை புரட்டி அவர்கள் சொன்ன வங்கி கணக்கில் பணத்தை டெப்பாசிட் செய்துள்ளார். அதன் பிறகு அவர்களை தொடர்புகொண்டபோது அவர்களிடம் பேசமுடியவில்லை. இதனால் குழம்பி போன அந்த பெண் இது குறித்து, தாலன்வாலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களின் வங்கி விவரம் மற்றும் மொபைல் எண்களை வைத்து தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
இதில், முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் சில தினங்களுக்கு முன்பு தாய்லாந்துக்கு அனுப்பிய கொரியரின் தரவுகளை மர்ம நபர்கள் திரட்டி இந்த நூதன கொள்ளையில் ஈடுப்பட்டது தெரியவந்தது.
-பவானி கார்த்திக்