கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் பாஸ்கருக்கு தலையிலும், அருள்ராஜுக்கு இடது கையிலும் காயம் ஏற்பட்டது. இதேபோல், ஆறுகாட்டுத்துறையிலிருந்து மேலும் இரு விசைப்படகுகள், 2 கண்ணாடியிழைப் படகுகளில் வெள்ளப்பள்ளம், புஷ்பவனம் ஆகிய மீனவ கிராமங்களில் இருந்து சென்ற மீனவர்கள் 24 பேர் அடுத்தடுத்து கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்த உடைமைகளும் பறிக்கப்பட்டன. கடலில் 7 இடங்களில் திங்கள்கிழமை மாலை 6 முதல் இரவு 11 மணிக்குள் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.
பாதிக்கப்பட்ட 28 மீனவர்களும் செவ்வாய்க்கிழமை வெவ்வேறு நேரங்களில் படகுகளுடன் கரைக்குத் திரும்பினர். இவர்களில் பலத்த காயமடைந்த மீனவர்கள் பாஸ்கர், அருள்ராஜ், அருள்வேல், சுப்பிரமணியன், வெற்றிவேல், செந்திலரசன், மருது, வினோத் ஆகிய 8 பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர், இவர்களில் 3 பேர் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், கியூ பிரிவு, தனிப் பிரிவு போலீஸாரும் விசாரித்து வருகின்றனர்.