அரியலூரில் அண்ணாமலை உருவப்படம் எரித்த அதிமுகவினர் சுமார் 25 பேர் கைது செய்யப்பட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பாஜக முக்கிய நிர்வாகிகளை அடுத்தடுத்து அதிமுக கட்சிக்குள் சேர்த்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு தாவும் முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். இதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான் என்றும், அவரோடு சம்மதத்துடன் தான் பாஜக முன்னாள் நிர்வாகிகள் அவர் மீது அவதூறு பரப்பி வருவதாகவும் பாஜக தொண்டர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பாஜகவினர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் படத்தை கொழுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அரியலூரில் அண்ணாமலையின் புகைப்படத்தை எரிந்த அதிமுகவினர் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி கடைவீதியில் அதிமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ரவி தலைமையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உருவப்படம் எரிப்பு நடைபெற்றது. அண்மையில் அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசியது அதிமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மீன்சுருட்டி பகுதியில் உள்ள அதிமுகவினர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் படத்தை தீ வைத்து எரிக்க முயற்சி செய்து அண்ணாமலை ஒழிக என கோஷங்கள் எழுப்பியவாறு வந்த நிலையில். மீன்சுருட்டி காவல்துறையினர் உருவ படத்தை கைப்பற்றி சுமார் 25-க்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.