ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆந்திர மாநில முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
தெலுங்கு தேசக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தில் கடந்த 2014 முதல் 2019 வரை முதல்வராக இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் மீது இவரது பதவி காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த புகார்கள் மீது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இதில் உண்மை முகாந்திரம் இருப்பதன் பேரில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் குற்றவியல் புலனாய்வு காவல்துறையினர் ஆந்திர மாநிலம் ஞானபுரம் நந்தியாலா டவுன் பகுதியில் உள்ள ஆர்கே ஹாலுக்குள் விரைந்து கைது செய்து இழுத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை கட்சி நிர்வாகிகள் பேருந்து உடைப்பு, கடையடைப்பு போராட்டம் என கலவரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கட்சியின் சார்பில் மாநிலத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து உள்ளது. எனினும், இன்று காலையில் வாகன போக்குவரத்தில் பாதிப்பு எதுவும் இல்லை என கூறப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்கட்சியின் தலைவர்களை காவல் துறை வீட்டு காவலில் வைத்து உள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஜனசேனா, பா.ஜ.க. ஆதரவு தெரிவித்து உள்ளன. இதனால், ஆந்திர பிரதேசம் முழுவதும் பதற்ற நிலை காணப்படுகிறது. இந்த சூழலில், ஆந்திர பிரதேசம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.