அசோக் நகரில் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் 120 சவரன் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொட்ட ஒரு தொழில் கூட துலங்காததால் திருடனாக மாறியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சென்னை அசோக் நகர் 12வது நிழற் சாலையைச் சேர்ந்தவர் சீனிவாசன் வயது 62.ரயில்வே துறையில் Chief Controller ஆக இருந்து 2020 செப்டம்பர் மாதம் பணி ஓய்வு பெற்றவர்.இவரது மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகி ஒருவர் அமெரிக்காவிலும் மற்றொருவர் பெருங்குடியிலும் வசித்து வருகின்றனர். சீனிவாசனின் மனைவி மீனா கடந்த 7ம் தேதி சொந்த ஊரான எர்ணாகுளத்திற்கு சென்று விட்டார்.
சீனிவாசன் மட்டும் வீட்டில் இருந்தார். கடந்த12ம் தேதி இரவு 7 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு ராகவன் காலனி நான்காவது குறுக்கு தெருவில் உள்ள அம்மா வீட்டிற்கு சென்று விட்டு 13ம் தேதி காலை வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 120 சவரன் தங்க நகை, 4 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக குமரன் நகர் காவல் நிலையத்தில் சீனிவாசன் புகார் செய்தார்.
காவல்துறை அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது கைவரிசை காட்டிவிட்டு சென்றது திருப்பத்தூரை சேர்ந்த பிரபல கொள்ளையன், ஹாரி பிலிப்ஸ்(60) என்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.திருப்பத்தூரில் தனது இரண்டாவது மனைவி காந்திமதி( living together) வீட்டில் குடிபோதையில் தூங்கிக் கொண்டிருந்த ஹாரி பிலிப்ஸை போலீசார் கைது செய்தனர்.அவரிடமிருந்து 47 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.மீதமுள்ள நகைகளை எங்கே பதுக்கி வைத்திருக்கிறார் என்ற விசாரணை நடைபெறுகிறது.
கைதான ஹரி பிலிப்ஸ் கடந்த 20 ஆண்டுகளாக சென்னை, பெங்களூர் நகரங்களில் கைவரிசை காட்டி வந்துள்ளார். சென்னையில் மட்டும் இவர் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.இதுவரை 23 தடவை சிறை சென்றுள்ளார்.முதல் மனைவி மற்றும் பிள்ளைகள் இவரை ஒதுக்கிய நிலையில் தற்போது காந்திமதி வயது 50 என்ற பெண்ணுடன் வசித்து வருகிறார்.
காந்திமதியையும் காவல்துறை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கைதான ஹரி பிலிப்ஸ், ஹோட்டல் உள்ளிட்ட பல தொழில்களை செய்துள்ளார். தொட்ட ஒரு தொழில் கூட துலங்கவில்லை.இதையடுத்து தான் கடந்த 20 வருடங்களாக, கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார் என காவல்துறை விசாரணையில் தெரிவித்தனர்.