ஈரான் மற்றும் ஓமன் நாட்டு டெலிகிராம் சேனலில் ஒரு செய்தி பரவி வருகிறது. அந்த செய்தி இதுதான்.
அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகளுக்கிடையே சமாதான பேச்சுவார்த்தை ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்கு ஓமன் அதிகாரிகள் மத்தியஸ்தர்களாக உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரான் நாட்டு துணை வெளியுறவு அமைச்சர் காசிம் கரிபாபாதியும் சென்றுள்ளார். பேச்சுவார்த்தையில் பங்கேற்று அனைவரும் அரங்கத்தை விட்டு வெளியேறிய நிலையில், கடைசியாக வெளியே சென்ற காசிம் கரிபாபதி மேஜையில் இருந்த விலையுயர்ந்த தங்கப் பேனாவை எடுத்து தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சென்று விட்டார். அப்படியே ஈரானுக்கும் தப்பி விட்டார்.
இந்த பேனாவின் மதிப்பு கிட்டத்தட்இட 13 லட்சம் ஆகும். இந்த நிலையில், பேனா காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த ஓமன் அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஈரான் இணை அமைச்சர் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து ஓமன் பத்திரிகைகள் செய்தி வெளியிட ஈரான் நாட்டுக்கு அவமானமாகி போனது. இதையடுத்து, ஈரான் நாட்டு தூதுவர் ஓமன் அதிகாரிகளிடத்தில் எழுத்து மூலமாக மன்னிப்பு கேட்டதுடன் தங்கப் பேனாவை திருப்பி ஒப்படைத்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ‘
ஆனால் , இந்த விஷயத்தை ஓமனுக்கான ஈரான் நாட்டு தூதர் மவுசா ஃபார்காங் முற்றிலும் மறுத்துள்ளார். பேச்சுவார்த்தை நடந்த அறையில் மேஜைகளோ அல்லது தங்க முலாம் பூசப்பட்ட பேனாக்களோ வைக்கப்படவில்லை. மொஜாஹெதின்-இ கல்க் (MEK) என்ற பயங்கரவாதக் குழுவுடன் இணைந்து டெலிகிராம் சேனலால் இந்தப் போலிச் செய்திகள் பரப்பப்படுகிறது ‘என்று அவர் தெரிவித்துள்ளார்.
தங்கப் பேனா திருடியதாக சொல்லப்பட்ட துணை அமைச்சர் கரிபாபாதி ஈரானின் நீதித்துறையின் முன்னாள் துணைத் தலைவராகவும், வியன்னாவில் உள்ள சர்வதேச அமைப்புகளுக்கான பிரதிநிதியாகவும் உள்ளார்.