உங்கள் ஊர் செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்…!!
அரியலூர் மாவட்டம் காரைக்குறிச்சி கிராமத்தில் உள்ள ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் ஆலயத்தில், லிங்கத்தின் மேல் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. 5 நாட்களுக்கு மட்டுமே நிகழும் இந்த அதிசயத்தை காண திரளான மக்கள் வருகை புரிகின்றனர். ஆகஸ்டு மற்றும் ஏப்ரல் மாதத்தில் சூரியபகவான் வலம் வந்து ஈசனை வழிபட்டதால் சூரிய ஒளிக்கதிரானது லிங்கத்தின் மீது படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள கட்சி கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இருந்த கொடிகம்பங்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் விஜயா தலைமையிலான அதிகாரிகள் அகற்றினர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் ஆலயத்தில் 48 ஆம் ஆண்டு வேள்வி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சண்டிகா பரமேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, மற்றும் யோகநிசமாம் சரஸ்வதி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் புனித தீர்த்தங்கள் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ரமேஷ் ராஜ் தலைமையில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர்கள் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை திமுகவின் உறுப்பினர்களாக இணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
10 ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்கியுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தாராபுரம் தேன்மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் 1750 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஏப்ரல் 30ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சாலையில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மதுபான கடை அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் அருகே அமைந்திருப்பதால் அதனை அகற்ற கூறி நீலப்புலிகள் இயக்கம் சார்பில் உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் பாலூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஒரு மாத காலமாக குடிநீர் வினியோகம் செய்து தரவில்லை என சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் ஊராட்சி மன்ற தலைவர் நடவடிக்கை மேற்கொள்ளாததால் வேதனை அடைந்த பழங்குடியின மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பேரணாம்பட்டு காவல் துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்த பின்னரே மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கோடை வெயிலால் மக்களுக்கு தாகத்தை தீர்க்கும் வகையில் எடப்பாடி நகர செயலாளரும்,நகர மன்ற எதிர்க்கட்சித் தலைவருமான முருகன் தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செம்மலை கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி உள்ளிட்ட நீர் ஆதாரம் உள்ள பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர், மற்றும் பேரூராட்சி, நகராட்சி ஆகிய வார்டுகளில் 43 பதவிகள் காலியாக உள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் ஆலோசனை பணி மற்றும் மின்னணு வாக்குபதிவு இயந்திரம் ஆய்வு செய்யும் பணியை வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சிவசௌந்தரவல்லி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மாவட்டம் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை திருவோணத்தை முன்னிட்டு ஸ்ரீநடராஜர் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. இக்கோவிலில் ஆண்டுக்கு ஆறுமுறை மட்டுமே நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறுவதால் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதையடுத்து உடனடியாக பேருந்தில் இருந்த 45 பயணிகளும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து தாராபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் டவுன் எக்ஸ்டென்ஷன் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பிரியாணி கடை ஒன்றில் மர்ம நபர்கள் சிலர் செல்போன்களை திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பாலூர் தகன மேடையில் ஐந்து பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில் சில ஜீவராசிகளை வைத்து பலி பூஜைகள் செய்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறையினரை கண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். மேலும் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தப்பி ஓடிய கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சித்தூர்கேட் பகுதியில் 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பயணியர் நிழற்கூடத்தின் மேற்கூரையில் இடிந்து விழுந்துள்ளது. பயணியர் நிழற்குடைத்தில் பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.