“உங்களால் நிறுத்தவே முடியாது” அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு குடிமகன்கள் சவால்..!!
தமிழ்நாட்டில் பெரும்பாலும் மதுபான ஒழிப்பு முற்றிலுமாக அமலுக்கு வர வேண்டும் என்பதற்கு தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. அதே சமயம் விசிக சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு குடிமகன்கள் சவால் விட்டுள்ளனர்..
தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் கடைகள் இருப்பதாகவும், இந்த டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடிமகன்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இன்று வரை எதுவும் மாறவில்லை என தெரிவித்தனர்.
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் வழங்கப்படும் மதுபாட்டில்களுக்கு பில் வழங்கும் திட்டத்தை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு ரசீது வழங்குதல், மதுபாட்டில்களில் பார்கோட் அச்சிட்டு அதன் மூலம் தொடர்ச்சியாக கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைளை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இதற்காக மென்பொருள் தயாரிக்க ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்துக்கு 294 கோடி ரூபாய் மதிப்பிலான பணி வழங்கப்பட்டிருந்தது. இதன்படி சோதனை முறையில் மதுபானங்களுக்கு ரசீது கொடுக்கும் நடைமுறை டாஸ்மாக் கடைகளில் அமலுக்கு வந்துள்ளது.
முதற்கட்டமாக ராணிப்பேட்டையில் உள்ள 7 கடைகளில் இப்பணி தொடங்கி உள்ளது. டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளை கணினிமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பில்லிங் முறை செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
இதையடுத்து டாஸ்மாக் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் கையடக்க ஸ்கேனர் மூலம் ஒவ்வொரு பாட்டிலிலும் உள்ள கலால் வரியுடன் கூடிய லேபிள்களை ஸ்கேன் செய்து பில் ரசீதுகளை வாடிக்கையாளரிடம் வழங்கப்படுகிறது.
மேலும் மதுபாட்டில்களை ஸ்மார்ட் போன் மூலம் ஸ்கேன் செய்தால், அந்த பாட்டில் எங்கே வாங்கப்பட்டது, எந்த தேதியில் வாங்கப்பட்டது, உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அறிய முடியும் என்றும் தெரிவித்தனர். இந்த திட்டம் மூலம் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவது தடுக்கப்படும் என அரசு எதிர்பார்க்கிறது.
ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை என்று குடிமகன்கள் குற்றம்சாட்டுகின்றனர். டாஸ்மாக்கில் பில்லிங் மட்டுமல்ல.. எதை வேண்டுமானாலும் கொண்டு வாங்க.. குவாட்டருக்கு எக்ஸ்ட்ரா 10 ரூபாய் வாங்குறதை உங்களால் நிறுத்தவே முடியாது என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு குடிமகன்கள் சவால் விட்டுள்ளனர்.
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..