6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலார்ட்..! சென்னையில் மட்டும் இதுவரை..!
மேற்குதிசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நேற்று இரவு முதல் சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழையால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
குறிப்பாக கீழ்ப்பாக்கம், ஆவடி, சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. தென்சென்னை, ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், சென்னை விமான நிலையத்தில் 7 வருகை விமானங்கள், 12 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 19 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில், ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
“தென்சென்னை, ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர், சிறுசேரி, சோழிங்கநல்லூர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்துள்ளது. சென்னையில் சராசரியாக ஜூலை மாதத்தில் 100 மி.மீ பெய்யும், ஆனால் நேற்று 1 மணி நேரத்தில் 60 மி.மீ மழை பெய்துள்ளது. 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது சென்னையில் அதிகளவு மழை பெய்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடற்கரை பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ