குடிதண்ணீர் கேட்டு பெண்கள் திருச்சி நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டம்..!!
குடிதண்ணீர் கேட்டு முறையிட்ட பெண்களிடம் அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட அடியக்கமங்கலம் திமுக ஊராட்சி மன்ற தலைவரின் அராஜகபோக்கை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் திருச்சி நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டம்..,
திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அடியக்கமங்கலம் ஊராட்சியின் 12வது வார்டு பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக குடிதண்ணீர் வராததால் அப்பகுதியில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வந்துள்ளனர். மேலும் 12வது வார்டு பகுதி மக்கள் அடியக்கமங்கலம் ஊராட்சியில் பிற வார்டுகளில் தண்ணீர் பிடிக்க சென்றால் அப்பகுதி மக்கள் இங்கு தண்ணீர் பிடிக்க கூடாது என விரட்டி அடிக்கின்றனர்.
இதனால் அடியக்கமங்கலம் 12வது வார்டு மக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைதூரம் சென்று குடிதண்ணீர் பிடிக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து 12வது வார்டு பகுதி பெண்கள் திமுகவை சேர்ந்த அடியக்கமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் கஸ்தூரி வரதராஜனை நேரில் சந்தித்து பலமுறை முறையிட்டுள்ளனர். அதற்கு ஊராட்சி மன்றத்தலைவர் கஸ்தூரிவரதராஜன் தேர்தலின்போது திமுகவிற்கு ஓட்டுபோடவில்லை எனவும், குடிதண்ணீர் உடனடியாக வழங்கமுடியாது எனவும், கழிவுநீர் கால்வாய் ஆகியவற்றை நீங்களே சுத்தம் செய்துகொள்ளுங்கள் எனவும் அராஜகமாக பேசி அவமதித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த 12வது வார்டு பகுதி மக்கள் குறிப்பாக பெண்கள் காலிகுடங்களுடன் திமுகவை சேர்ந்த அடியக்கமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் கஸ்தூரிவரதராஜனின் அராஜக போக்கை கண்டித்து திருச்சி-நாகை தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தில் ஆண்டிபாளையம் என்ற இடத்தில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
சாலைமறியல் போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து அங்குவந்த காவல்துறையினா மற்றும் அரசு அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்துசென்றனர்.
Discussion about this post