ஜி-20 மாநாடு இந்தியாவில் நாளை நடைபெற உள்ள நிலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு நடைமுறைக்கு வந்தது.
இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ரஷியா, சீனா போன்ற வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்தியா தலைமை தாங்கி நடத்தும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதைப்போல உறுப்பினர் அல்லாத பல்வேறு நாடுகளும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றன.
பிரமாண்டமான இந்த ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கும் தலைவர்கள் டெல்லியில் குவியத்தொடங்கி விட்டனர். இதில் முதல் நபராக நைஜீரிய அதிபர் போலா அகமது தினுபு கடந்த 5-ந்தேதி டெல்லி வந்தார். அவரை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகெல் வரவேற்றார். அடுத்ததாக மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் தன் மனைவியுடன் நேற்று காலை 6.15 மணிக்கு டெல்லி வருகை தந்தார். விமான நிலையத்தில் அவரை மத்திய கப்பல்துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் யெசோ நாயக் வரவேற்றார். மேலும் அமெரிக்காவில் இருந்து அதிபர் பைடன் இந்தியா வர புறப்பட்டுள்ளார் என்றும் அறியப்படுகிறது.
இவ்வாறு உலகின் அதிகாரம் மிக்க தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு வருவதால் தலைநகரில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ராணுவ விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வானில் வட்டமடித்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாநாடு நடைபெறும் பிரகதி மைதானம், உலக தலைவர்கள் தங்கும் ஆடம்பர விடுதிகள் போன்றவை பல அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டு உள்ளன. புதுடெல்லி மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் வாகன இயக்கத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இதைத்தவிர பொதுமக்களுக்கு பல்வேறு தடைகள், ஆன்லைன் வினியோகம் உள்பட வழக்கமான சேவைகள் ரத்து போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. மாநாட்டுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் முக்கியமாக பாரத் மண்டபம், ராஜ்காட் மற்றும் தலைவர்கள் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களை அவர் ஆய்வு செய்தார். அவருடன் டெல்லி போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.