திருச்சி அருகே கணவரை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
திருச்சி மாவட்டம், முசிறி அருகே அப்பனநல்லூர் ஊராட்சி மாதுளம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் (35). இவருடைய மனைவி அமுதா (30) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். லாரி டிரைவரான குமரவேல் கடந்த 2018-ம் ஆண்டு குடும்பத்துடன் திருப்பூர் பல்லகவுண்டம் பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் வசித்து வந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி பொங்கல் பண்டிகைக்காக குமரவேல் தனது குடும்பத்துடன் துறையூர் அருகே குரும்பப்பட்டியில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். மறுநாள் இரவு அப்பகுதியில் உள்ள குப்பை கிடங்கு பகுதியில் கழுத்தின் பின்பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் குமரவேல் பிணமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து ஜெம்புதபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் குமரவேல் மனைவி அமுதாவிற்கும், முசிறி அடுத்த வெள்ளாளப்பட்டி சேர்ந்த விவசாயி கண்ணன் (33) என்பவருக்கும் திருமணத்திற்கும் முன்பே பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. ஆனால் அமுதா பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் குமரவேலை திருமணம் செய்து கொண்டுள்ளார். கண்ணன் சத்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் அமுதாவிற்கும் கண்ணனுக்கும் தொடர்ந்து பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனையறிந்த கண்ணனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்றதால் கண்ணனுக்கும் அமுதாவுடன்பழக்கம் அதிகரித்தது.
இதற்கு குமரவேல் தடையாக இருந்ததால் அவரை மதுவிருந்து வைப்பதாக கூறி கண்ணன் அழைத்து சென்ற நிலையில் குமரவேலின் கழுத்தில் கத்தியால் குத்தி கண்ணன் கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் அமுதா தனக்கு ஒன்றும் தெரியாதது போல் நடித்து வந்துள்ளார். குமரவேலின் செல்போனுக்கு வந்த அழைப்பை வைத்து போலீசார் விசாரணை செய்ததில் இந்த கொலையில் அமுதாவிற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அமுதா, கண்ணன் ஆகியோரே போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி 2-வது ஜூடிசியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயக்குமார் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட கண்ணன், அமுதா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ 2ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் ஆஜர் ஆனார்.
Discussion about this post