காமராஜரின் பணிகளை என்றும் போற்றுவோம்..! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு..!
இன்று தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் திமுக இளைஞ்சர்கள் நலன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூகவலைதளம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை போஸ்ட் செய்துள்ளார்.. அதில் அவர் கூறியிருப்பதாவது.
“கல்வியை கனவில் கூட நினைக்கத் தயங்கிய ஒரு தலைமுறையை பள்ளிக்கூடங்கள் நோக்கி அழைத்து வந்த முன்னாள் முதலமைச்சர் – பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் இன்று.
கடைக்கோடி மனிதர்களின் முன்னேற்றம் என்ற ஒருமித்த சிந்தனையோடு, பெருந்தலைவர் காமராஜர் – முத்தமிழ் அறிஞர் கலைஞர் இடையே இருந்த அன்பும் – நட்பும் நாடறிந்தவை.
விடுதலைப் போராட்டம் – மாநில முன்னேற்றத்துக்கான ஆட்சி நிர்வாகம் – ஏழை, எளிய மக்களுக்கான அரசியல் என்று உழைத்த காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அறிவித்தார்கள்.
இன்று காமராஜரின் பிறந்த நாளில், உலகமே போற்றி பின்பற்றுகிற காலை உணவுத் திட்டத்தை, ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்துள்ளார்கள் நமது மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்.
இதனால் காலை உணவுத் திட்டம் மூலம் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்துள்ளது. கல்வி வளர்ச்சி நாளையொட்டி விரிவுபடுத்தப்பட்டுள்ள காலை உணவுத்திட்டம், நம் மாணவர்களின் கற்றல் திறனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பணிகளை என்றும் போற்றுவோம். அவரது புகழ் ஓங்கட்டும்..” என இவ்வாறே அவர் எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ