நடிகர் விஜய் சேதுபதி இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்கு அமைதியாக உதவி செய்து வருவதாக பாண்டிச்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் வீரராகவன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி ஏழை எளிய மக்களுக்கு சமூக நலத்திட்டங்களை செய்து வருகிறார்.
அந்த வகையில், கடந்த 2019 ஆண்டு முதல் சமுதாயத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்காக வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
இத்திட்டத்தின் மூலம் இதுவரை 1 லட்சத்து 133 பேர் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து உள்ளார்கள். மேலும் இதன் மூலம் 73 சுய தொழில் முனைவோர்களையும் உதவியிருப்பதாக பாண்டிச்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் வீரராகவன் தெரிவித்துள்ளார். இதையடுத்து விஜய் சேதுபதிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.