வேலூர் : காட்டுக்கொல்லை கிராமத்தை உரிமை கொண்டாடும் வக்பு போர்டு… தவிப்பில் மக்கள்!
திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள திருச்செந்துறை கிராமம் முழுவதும் தமிழ்நாடு வக்ஃப் வாரியம் தனக்குச் சொந்தமானது என்று கூறியிருப்பதால், அந்த கிராமத்தில் வசிப்பவர்கள் தங்களுடைய வீடுகளை விற்கவோ முறைப்படி கிரயப்பதிவு செய்யவோ முடியாத நிலை காணப்படுகிறது. தற்போது, அதே போன்ற நிலைமை வேலூர் மாவட்டத்திலுள்ள காட்டுக்கொல்லை கிராமத்துக்கும் ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்டுக்கொல்லை கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இவர்கள், அனைவரும் வக்பு போர்டுக்கு சொந்தமான நிலத்தில் வசித்த வருவதாக அந்த கிராமத்தை சேர்ந்த சையது சதாம் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த கிராமத்திலுள்ள தர்கா மற்றும் மசூதியை இவர்தான் 2021 ம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில், காட்டுக் கொல்லை கிராமம் வக்பு போர்டுக்கு சொந்தமானது என்று கூறி கிராமத்தினரை ஊரை விட்டு வெளியேறுமபடி அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கிட்டத்தட்ட 150 குடும்பங்களுக்கு அப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சதாம் கூறுகையில், இதற்கு முன்னர் மசூதியை நிர்வகித்த எனது தந்தை படிப்பறிவு இல்லாதவர். அவரின் அறியாமையை பயன்படுத்தி வக்பு போர்டுக்கு சொந்தமான இந்த நிலத்தை பலரும் ஆக்கிரமித்துள்ளனர். இந்த கிராமம் வக்பு போர்டுக்கு சொந்தமானது என்பதற்கு எங்களிடத்தில் ஆவண்ங்களுடன் கூடிய ஆதாரங்கள் உள்ளன என்ற ஆணித்தரமாக கூறுகிறார்.
இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் வசிப்பதற்கு அடிப்படை வாடகை தர வேண்டும். அல்லது கிராமத்தை காலி செய்து விட வேண்டுமென்றும் நோட்டீசில் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால், சையது சதாமின் நோட்டீசுக்கு கிராம மக்கள் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, மேலும் இரு நோட்டீஸ் வழங்கப்படும் அதற்கு பிறகும பதில் இல்லையென்றால் கோர்ட் வழியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சதாம் எச்சரித்துள்ளார்.
இதன் காரணமாக காட்டுக்கொல்லை கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கிராம மக்கள் கூறுகையில், ‘நான்கு தலைமுறைகளாக நாங்கள் இந்த கிராமத்தில் வசிக்கிறோம். நாங்கள் வசிக்கும் இடம் எங்களுக்கு சொந்தமானது என்றே கருதினோம். திடீரென சதாம் வந்து வாடகை கட்ட சொல்கிறார். அவரின் தந்தை இப்படியெல்லாம் எங்களிடத்தில் கேட்டது இல்லை என்று குமுறுகின்றனர்.
இதற்கிடையே, காட்டுக்கொல்லை கிராமத்தினர் வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சமியை சந்தித்து இந்த விவகாரம் குறித்து முறையிட்டனர். தங்களிடத்தில் முறையான அரசு ஆவணங்கள் , பஞ்சாயத்துக்கு கட்டிய வரி ரசிது போன்றவை உள்ளன. எனவே, எங்களுக்கு பட்டா வழங்கும்படி கேட்டனர். இதையடுத்து, மாவட்ட கலெக்டர் சுப்பு லட்சுமி, தற்போதைக்கு வாடகை கட்ட வேண்டாமென்று கிராம மக்களிடத்தில் கூறியுள்ளார். தற்போதைக்கு இந்த பிரச்னை முடிந்தாலும், எப்போது வேண்டுமானாலும் பிரச்னை வெடிக்கலாம் என்பதால் கிராம மக்கள் ஓரு வித பயத்திலேயே உள்ளனர்.
இந்த நிலையில் வேளச்சேரி தொகுதி திமுக எம்.எல். ஏ ஹசன் மவுலானா கூறுகையில், ‘வக்பு போர்டுக்கு சொந்தமான நிலம் வக்பு போர்டுக்கு சொந்தமானதுதான். அதில் எந்த மாற்றுக்கருத்துக்கே இடம் இல்லை. எனினும், காட்டுக்கொல்லை கிராமத்தில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்படமாட்டார்கள். அவர்கள் குறைந்த அளவு வாடகை செலுத்தி அங்கேயே வசிக்கலாம். யாரையும் கிராமத்தில் இருந்த வெளியேற்ற வேண்டிய அவசியமில்லை ‘ என்று
தெரிவித்துள்ளார்.