நீங்கள் பார்க்க மறந்த பல்வேறு முக்கிய செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக..!!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே இரண்டு இருசக்கரவாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாலிக்பாஷா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். பாலச்சந்தர், பரணிகுமார் ஆகியோர் பலத்தகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த பிரபா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் வி.எஸ்.முத்துராமசாமி என்பவர் அடியாட்களுடன் வந்து குடும்பத்தினரை தாக்கி, நகைகளை எடுத்து சென்றதாக குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து அவர் புகார் தெரிவித்ததின் பேரில் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாகவுள்ள முத்துராமசாமியை தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வருவாய் பகுதியை சேர்ந்த வித்யா, கடந்த 30 ம் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் அவரது உடல் புதைக்கப்பட்ட நிலையில், கிராம நிர்வாக அலுவலர் வித்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணை பணிகள் நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி ஏந்தி வீதி உலா வந்தனர். பின்னர் புனித நீர் கொண்டுவரப்பட்டு கலசத்தின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் இலக்கிநாயக்கன் பட்டியைச் சேர்ந்த வெங்கடேசன், பிரிந்து சென்ற மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அவரது மாமியர் உயிருடன் இருந்த நிலையில் இறந்ததாக கூறி, உறவினர்களின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பியுள்ளார். இது குறித்து வினோதினி கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வெங்கடேசனை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் வள்ளிமலை சுப்பிரமணியர் திருக்கோவிலில் பங்குனி மாத கிருத்திகையை முன்னிட்டு உற்சவர் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வெள்ளிக்கவசம் சார்த்தப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமிதரிசனம் செய்தனர்.